Posts

Showing posts from February, 2021

திருமந்திரம் - பாடல் #1071

  நான்காம் தந்திரம் - 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)   அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர் பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார் மருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப் பொருளுற்றுச் சேவடி போற்றுவன் யானே.   விளக்கம்: பாடல் #1070 இல் உள்ளபடி திரிபுரை சக்தி கொடுத்த நல்லருளைப் பெற்று உணர்ந்தவர்கள் அதை எடுத்துச் சொல்லும் போது அதைக் கேட்கும் மனிதர்களே நீங்கள் கேட்டதை உணர்ந்து உலகப் பொருட்களைப் பற்றிக் கொண்டு மாயையில் மயங்கி இருக்கும் உங்களுடைய சிந்தனையை மாற்றி உலகங்கள் அனைத்தையும் இயக்குகின்ற திரிபுரை சக்தியின் தலைவனாகவும் அடியவர்கள் வணங்கிப் போற்றும் உண்மைப் பொருளாகவும் இருக்கும் இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு அவனது திருவடிகளையே போற்றி வணங்கும் என்னோடு சேர்ந்து போற்றி வணங்குங்கள்.    

திருமந்திரம் - பாடல் #1070

 திருமந்திரம் - பாடல் #1070: நான்காம் தந்திரம் - 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்) மேதாதி யீரெட்டு மாகிய மெல்லியல் வேதாதி நூலின் விளங்கும் பராபரை ஆதார மாகியே ஆய்ந்த பரப்பினள் நாதாதி நாதத்து நல்லரு ளாளே.   விளக்கம்: உடலை இயக்குகின்ற மேதை முதலான பதினாறு கலைகளாக இருந்து அனைத்தையும் இயக்குகின்ற மென்மையான இயல்பைக் கொண்ட வேதங்கள் கூறும் பராபரை என்பவள் திரிபுரை சக்தியாகும். அவளே அனைத்திற்கும் ஆதாரமாக இருந்து எங்கும் பரந்து வியாபித்து இருப்பவள். அவளே நாதத்தின் முதலாகிய இறைவனுடன் சேர்ந்து நல்லருளைத் தருகிறாள். குறிப்பு: பதினாறு கலைகள் என்பது உயிர்களின் உடலின் இயக்கத்திற்கு காரணமாக இருக்கின்றது. அவை கீழ்வருமாறு: 1. மேதைக்கலை 2. அருக்கீசக்கலை 3. விடக்கலை 4. விந்துக்கலை 5. அர்த்தசந்திரன் கலை 6. நிரோதினிக்கலை 7. நாதக்கலை 8. நாதாந்தக்கலை 9. சக்திக்கலை 10. வியாபினிக்கலை 11. சமனைக்கலை 12. உன்மனைக்கலை 13. வியோமரூபினிக்கலை 14. அனந்தைக்கலை 15. அனாதைக்கலை 16. அனாசிருதைக்கலை    

அப்பனை நந்தியை

  அப்பனை நந்தியை ஆரா அமுதினை ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை எப்பரிசு யாயினும் ஏத்துமின் ஏத்தினால் அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே...   உயிர்களுக்குஎல்லாம் தலைவனை , தந்தையான இறைவனை உண்ண உண்ண தெவிட்டாத இன்னும் உண்ணவேண்டும் என்ற ஆசை தீராத அமுதம் போன்றவனை தனக்கு ஒப்பார்   இல்லாத அருளை வாரி வழங்கும் வள்ளலை ஊழி காலத்தும் தான் அழியாது இருக்கின்ற முல முதல்வனை , எந்த வகையிலாயினும் போற்றி புகழ்ந்து பணிந்து பரவுங்கள் , பரவினால் அவனது அருள் என்ற பரிசைப் பெறலாம் என்கிறார் திருமூலர்