Posts

Showing posts from May, 2021

திருமந்திரம் - பாடல் #1101

  திருமந்திரம் - பாடல் #1101: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) வெளிப்படு வித்து விளைவறி வித்துத் தெளிப்படு வித்தென சிந்தையி னுள்ளே களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி ஒளிப்படு வித்தென்னை யுய்யக்கொண் டாளே . விளக்கம்: பாடல் #1100 இல் உள்ளபடி அனைத்திற்கும் மேலான சதாசிவத்தை வெளிப்படுத்தி அருளிய வயிரவி தேவி அதன் பயனாக பேரறிவு ஞானத்தைக் கொடுத்து அந்த ஞானத்தின் பயனாக தெளிவான சிந்தனையைக் கொடுத்து அதன் பயனாக பேரின்பத்தை அடைய வைத்து அதன் பயனாக பெருஞ்சோதி வடிவான இறைவனுடன் கதிர் வடிவான எம் ஆன்மாவை சேர வைத்து அதன் பயனாக எம்மையும் சோதி உருவம் பெற வைத்து எமது ஆன்மா முக்தியடையும்படி செய்து எம்மை முழுவதும் ஆட்கொண்டாள்.

திருமந்திரம் - பாடல் #1100

  திருமந்திரம் - பாடல் #1100: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) கோலக் குழலி குலாய புருவத்தள் நீலக் குவளை மலர்கின்ற கண்ணினாள் ஆலிக்கு மின்னமு தானந்த சுந்தரி மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே. விளக்கம்: பாடல் #1099 இல் உள்ளபடி சாதகரின் உடலும் உயிரும் இறைவனாகவே ஆகிவிடுவதற்கு காரணமான மாபெரும் கருணையுடைய வயிரவியின் வடிவத்தை இப்பாடலில் அறிந்து கொள்ளலாம். அழகிய கூந்தலுடன் வளைந்த புருவங்களைக் கொண்டு நீல நிறத்தில் இருக்கும் குவளை மலர் மலர்ந்தது போன்ற கண்களோடு இனிமையான அமிழ்தத்தோடு சேர்ந்து பேரானந்தமாக இருக்கின்ற பேரழகு பொருந்திய வயிரவியே பாடல் #1099 இல் உள்ளபடி சாதகரின் உடலும் உயிரும் இறைவனாகவே ஆகிவிடுவதற்கு காரணமாக இருந்து அனைத்திற்கும் மேலான சதாசிவத்தை வெளிப்படுத்தி அருளுகின்றாள்.

திருமந்திரம் - பாடல் #1099

  திருமந்திரம் - பாடல் #1099: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி ஓதி யுணரி லுடலுயி ரீசனாம் பேதை யுலகிற் பிறவிகள் நாசமாம் ஓத வுலவாத கோலமொன் றாகுமே. விளக்கம்: பாடல் #1098 இல் உள்ளபடி ஆதி சக்தியான வயிரவியே எப்போதும் இளமையுடன் அண்ட சராசரங்களிலுள்ள அனைத்து இடத்திற்கும் அரசியாக வீற்றிருக்கின்றாள். அவளது மந்திரத்தை செபித்து தமக்குள் அவளை உணரும் சாதகர்களின் உடலும் உயிரும் இறைவனாகவே ஆகிவிடும். மாயையால் மயங்கி இருக்கும் இந்த உலகத்தில் மீண்டும் பிறவி எடுக்காமல் இருக்கும் படி எப்போதும் அழியாத உடலையும் அவர்கள் பெற்று விடுவார்கள்.

திருமந்திரம் - பாடல் #1098

  திருமந்திரம் - பாடல் #1098: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) சாற்றிய வேதஞ் சராசர மைம்பூதம் நாற்றிசை முக்கண்ணி நாடு மிருள்வெளி தோற்று முயிர்ப்பன்மை சோதி பராபரை ஆற்றலொ டாய்நிற்கு மாதி முதல்வியே. விளக்கம்: பாடல் #1097 இல் உள்ளபடி சாதகர்கள் சமர்ப்பணம் செய்த சிதாகாய மந்திரம் வேதமாகவும், அண்ட சராசரங்களாகவும், ஐந்து பூதங்களாகவும், நான்கு திசைகளிலும் தேடிப் பார்க்கும் மூன்று கண்களை உடைய இறைவியாகவும், இருண்ட அண்டமாகவும், ஒளி பொருந்திய பரவெளியாகவும், பலவிதமான உடல்களில் பிறவி எடுத்து வரும் உயிர்களாகவும், சோதி வடிவாகவும், அசையும் சக்தியான பராசக்தியாகவும், அனைத்தையும் உருவாக்குகின்ற ஆற்றலுடன் அனைத்துமாகவும் இருக்கின்ற ஆதி தலைவியாகவும் இருக்கின்றது. கருத்து: சிதாகாய மந்திரத்தின் தன்மைகளை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

திருமந்திரம் - பாடல் #1097

  திருமந்திரம் - பாடல் #1097: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) நின்ற வயிரவி நீலி நிசாசரி ஒன்று மிரண்டு மொருங்கிய வுள்ளத்துச் சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே நன்றருள் ஞாலத்து நாடிடுஞ் சாற்றியே. விளக்கம்: பாடல் #1096 இல் உள்ளபடி பிரகாசமாக சாதகரின் உடலுக்குள் வந்து வீற்றிருக்கும் வயிரவியானவள் நீல நிற திருமேனியுடன் அடியவர்களின் உள்ளத்தில் இருக்கும் இருளுக்குள் இருளாகவே வீற்றிருக்கின்றாள். எவரொருவரின் மனமும் வாக்கும் உடலும் ஒன்றாக இருக்கிறதோ அவரின் உள்ளத்திற்குள் இறைவனுடன் இறைவியும் சேர்ந்து புகுந்து அங்கேயே வீற்றிருந்து அருள் புரிகின்றாள். அவளுடைய நன்மை தரும் அருளை அடைய விரும்பும் உயர்ந்தோர் அவளை தேடி அடைந்து வயிரவியின் மந்திர செபத்தை சமர்ப்பணம் செய்வார்கள். கருத்து: மனம் வாக்கு உடல் ஒன்றாக இருப்பது என்பது மனதை ஒருநிலைப் படுத்தி சிதாகாய மந்திரத்தை செபித்து நேத்திர முத்திரையை செய்யும் போது பாடல் #1096 இல் உள்ளபடி தானாகவே விரிந்து அமைந்த சங்கு முத்திரையுடன் சமர்ப்பணம் செய்தால் இறைவனும் இறைவியும் அவர்களின் உள்ளத்திற்குள் ஒன்றாக வீற்...

திருமந்திரம் - பாடல் #1096

  திருமந்திரம் - பாடல் #1096: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) கூவிய சீவன் பிராணன் முதலாகப் பாவிய சவ்வுடன் பண்ணு மகாரத்தை மேவிய மாயை விரிசங்கு முத்திரை தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே. விளக்கம்: பாடல் #1095 இல் உள்ளபடி உரக்க (சத்தமாக) செபித்த சாதகர் தமது மூச்சுக்காற்றுடன் சேர்ந்து 'சம்' எனும் மந்திரத்தை உயிருடன் மாயை சேர்ந்து இருக்கும் பாவனையில் தாமாகவே விரிந்து அமைந்த சங்கு முத்திரையுடன் சமர்ப்பணம் செய்தால் வயிரவியானவள் பிரகாசமாக சாதகரின் உடலுக்குள் வந்து வீற்றிருப்பாள். குறிப்பு: மூச்சுக்காற்றுடன் 'சம்' மந்திரத்தை சத்தமாக சாதகர் செபிக்கும் போது அதன் உச்ச நிலையில் அவரது உடலோடு இருக்கும் மாயையால் தானாகவே அவரது விரல்கள் விரிந்த சங்கு முத்திரையை பிடிக்கும். இந்த மந்திரத்தை சங்கு முத்திரையுடன் இறைவிக்கு சமர்ப்பணம் செய்தால் இறைவியே சாதகருக்குள் வந்து வீற்றிருப்பாள்.

திருமந்திரம் - பாடல் #1095

  திருமந்திரம் - பாடல் #1095: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) பேசிய மந்திர மிகாரம் பிரித்துரை கூச மிலாத சகாரத்தை முன்கொண்டு வாசிப் பிராண னுபதேச மாகைக்குக் கூசிய விந்து வுடன்கொண்டு கூவே. விளக்கம்: பாடல் #1092 இல் உள்ள சிதாகாய மந்திரத்தை எப்படி செபிப்பது என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். பாடல் #1094 இல் உள்ளபடி செபித்த சிதாகாய மந்திரத்தில் 'இ' என்ற எழுத்தை நீக்கிவிட்டு 'ச' எழுத்தை முன்னே வைத்து 'சம்' எனும் மந்திரத்தை இறைவனைத் தவிர வேறு எந்த எண்ணங்களும் இல்லாமல் உச்சரித்து மூச்சுக்காற்று உபதேசித்த (பாடல் #1092 இல் உள்ளபடி) வயிரவி மந்திரத்தை பிரகாசமான ஒளிக்கீற்றுக்களை உடைய குண்டலினி (பாடல் #860 இல் காண்க) அக்னியோடு சேர்த்து உரக்க (சத்தமாக) செபியுங்கள்.

திருமந்திரம் - பாடல் #1094

  திருமந்திரம் - பாடல் #1094: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) வருத்த மிரண்டுஞ் சிறுவிரன் மாறிப் பொருந்தி யணிவிரல் சுட்டிப் பிடித்து நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே பெருத்த விரலிரண் டுள்புகப் பேசே. விளக்கம்: பாடல் #1093 இல் உள்ள நேத்திர முத்திரையை எப்படி செய்வது என்பதை இப்பாடலில் அறிந்து கொள்ளலாம். பாடல் #1093 இல் உள்ளபடி உயிர் பயம் மற்றும் உலகப்பற்று என்ற இரண்டு விதமான பிறவித் துன்பங்களையும் போக்கக்கூடிய நேத்திர முத்திரையை செய்ய முதலில் சுண்டு விரலையும் மோதிர விரலையும் சேர்த்துப் பிடித்து அதன் பிறகு சுட்டு விரலையும் நடுவிரலையும் நீட்டிப் பிடித்து இரண்டு விரல் சேர்க்கைக்கும் நடுவில் கட்டை விரலை நுழைத்து மற்ற நான்கு விரல்களையும் மடக்கிப் பிடித்து சிதாகாய மந்திரத்தை செபியுங்கள்.

திருமந்திரம் - பாடல் #1093

  திருமந்திரம் - பாடல் #1093: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) சிகைநின்ற வந்தக் கவசங்கொண் டாதிப் பகைநின்ற வங்கத்தைப் பாரென்று மாறித் தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம் வகைநின்ற யோனி வருத்தலு மாமே. விளக்கம்: பாடல் #1092 இல் உள்ளபடி தலை உச்சியில் கேட்ட சிதாகாய மந்திரத்தின் மூலம் உயிர்கள் ஆதியிலிருந்தே தங்களின் ஆன்மாவோடு தொடர்ந்து வந்து இறைவனை அடைய விடாமல் அவர்களின் உடலைச் சுற்றி கவசம் போல தடுத்துக் கொண்டு இருக்கும் உயிர் பயத்தையும் உலகப் பற்றையும் மாற்றி அமைக்க அந்த மந்திரத்துடன் நேத்திர முத்திரையை சேர்த்து தியானித்து வந்தால் அந்தப் பயத்தையும் பற்றையும் சூலம் அழித்து இனி பிறவி இல்லாத நிலைக்கு கொண்டு செல்லும். கருத்து: இறைவனை அடைய விடாமல் உயிர்களைச் சுற்றி கவசமாக இருக்கும் உயிர் பயம் உலகப் பற்று ஆகிய எதிர்மறை எண்ணங்களை வயிரவியின் சிதாகாய மந்திரத்துடன் நேத்திர முத்திரையை சேர்த்து தியானிப்பதின் மூலம் இறைவனை அடையும் நேர்மறை எண்ணங்களாக மாற்றி அமைத்து பிறவி இல்லாத நிலையை அடையலாம்.

திருமந்திரம் - பாடல் #1092

  திருமந்திரம் - பாடல் #1092: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) காணு மிருதய மந்திர முங்கண்டு பேணு நமவென்று பேசும் தலைமேலே வேணு நடுவு மிகநின்ற வாகுதி பூணு நடுவென்ற வந்தஞ் சிகையே. விளக்கம்: பாடல் #1092 இல் உள்ளபடி தூய்மையான ஆன்மாவை சாதகர் கண்டு உணர்ந்த பிறகு இருதயத்தில் கேட்கும் இருதய மந்திரத்துடன் 'நம' சேர்த்து இறைவனை போற்றி வணங்கினால் மூலாதாரத்திலிருந்து கிளம்பிய அக்னி தலைக்கு மேலே சுழுமுனை நாடியின் உச்சி வரை மிகவும் நீண்டு மாபெரும் அக்னியாக இருக்கும். இதன் பிறகு தலை உச்சிக்கும் அதிலிருந்து சிறிது தூரத்திலிருக்கும் துவாதசாந்த வெளிக்கும் நடுவில் கேட்கும் சிதாகாய மந்திரத்தை அறிந்து கொள்ளுங்கள். குறிப்பு: பாடல் #1086 இல் உள்ளபடி மானசீக பூஜையில் இதயத்துடிப்பை மிருதங்கமாக பாவிக்கும் போது கேட்கும் ஒலியே இருதய மந்திரமாகும். மூச்சுக்காற்றை நாதஸ்வரமாகவும் பாவிக்கும் போது தலை உச்சியில் கேட்கும் ஒலியே சிதாகாய மந்திரமாகும்.

திருமந்திரம் - பாடல் #1091

  திருமந்திரம் - பாடல் #1091: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) தாமக் குழலி தயைக்கண்ணி யுண்ணின்ற வேமத் திருளற வீசு மிளங்கொடி யோமப் பெருஞ்சுட ருள்ளெழு நுண்புகை மேவித்து அமுதொடு மீண்டது காணே. விளக்கம்: பாடல் #1090 இல் உள்ளபடி குருவாகிய இறைவன் அருளிய வழிமுறையில் சாதகம் செய்தால் நறுமணம் வீசுகின்ற மலர்களை சூடியிருக்கும் கூந்தலுடன் கருணை பொழியும் கண்களை உடைய வயிரவியானவள் சாதகர்களின் உள்ளுக்குள்ளே வீற்றிருந்து அவர்களின் ஆணவம் மலத்தை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கி அருளுவாள். வெளியில் செய்யும் யாகத்தீயில் வரும் நுண்மையான புகையைப் போலவே உள்ளுக்குள் இருக்கும் மூலாதார அக்னியிலிருந்து குண்டலினி சக்தியை ஒவ்வொரு சக்கரங்களாக மேலே ஏற்றிச் சென்று தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் சேர்த்து அங்கே அமிழ்தத்தை சுரக்க வைத்து அதைப் பருகிய ஆன்மா ஆணவத்திலிருந்து முழுவதும் மீண்டு தூய்மையானதாக திரும்பி வருவதைக் காணுங்கள்.

திருமந்திரம் - பாடல் #1090

  திருமந்திரம் - பாடல் #1090: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) உரைத்த நவசத்தி யொன்று முடிய நிரைத்த விராசி நெறிமுறை எண்ணிப் பிரைச்சத மெட்டுமுன் பேசிய நந்தி நிரைத்து நியதி நியமஞ்செய் தானே. விளக்கம்: பாடல் #1089 இல் உள்ளபடி இறைவன் அருளிய ஒன்பது சக்திகளை வழிபடும் முறையை இப்பாடலில் அறிந்து கொள்ளலாம். வயிரவியின் ஒன்பது சக்திகளில் முதன்மையாக இருக்கும் மனோன்மணியைச் சுற்றி வயிரவி செய்யும் 12 கலைகளை (பாடல் #1075 இல் உள்ளபடி) எண்ணத்தில் வைத்து தியானித்து வயிரவி இருக்கும் திருக்கோலத்தை தமக்குள் தரிசிக்கும் முன்பே அதை எவ்வாறு செய்ய வேண்டும் அதற்கான வழி முறைகள் என்னென்ன என்பதை குருவாக இருந்து இறைவனே கொடுத்து அருளினார். கருத்து: வயிரவி செய்யும் பன்னிரண்டு செயல்களை எண்ணி தியானித்தால் வயிரவியின் திருக்கோலத்தை தரிசிக்கும் வழியை இறைவனே குருவாக வந்து அருளுவார்.

திருமந்திரம் - பாடல் #1089

  திருமந்திரம் - பாடல் #1089: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) அந்த நடுவிர லாதி சிறுவிரல் வந்த வழிமுறை மாறி யுரைசெயுஞ் செந்தமி ழாதி தெளிந்து வழிபடு நந்தி யிதனை நவமுரைத் தானே. விளக்கம்: சுண்டு விரலில் உள்ள மூன்று கோடுகளில் ஆரம்பித்து நடு விரலில் உள்ள மூன்று கோடுகளில் முடிக்கும்படி மொத்தம் ஆறு எழுத்துக்கள் கொண்ட தூய தமிழ் மந்திரத்தை குருவின் அருளால் பெற்று அதை முதலில் நேர் மறையாகவும் பின்பு எதிர்மறையாக மாற்றியும் ஓதி வழிபடுங்கள் என்று குருவாக இருக்கும் இறைவன் ஒன்பது சக்திகளை வழிபடும் முறையாக அருளினான்.

திருமந்திரம் - பாடல் #1088

  திருமந்திரம் - பாடல் #1088: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) காரணி மந்திர மோதுங் கமலத்துப் பூரண கும்ப விரேசம் பொருந்திய நாரண நந்தி நடுவங் குரைசெய்த ஆரண வேதநா லந்தமும் ஆமே. விளக்கம்: பாடல் #1087 இல் உள்ளபடி முத்தொழில்களுக்கு நன்மை செய்யும் காரணியாக இருக்கும் திரிபுரை சக்தியானவள் தாமரை மலரின் மேல் அமர்ந்து கொண்டு வேதங்களை ஓதி உயிர்களைப் படைக்கின்ற பிரம்மாவின் படைத்தல் தொழில், உயிர்கள் அனைத்திற்கும் மூச்சுக்காற்றாக இயங்கிக் கொண்டு அவற்றை காப்பாற்றுகின்ற விஷ்ணுவின் காத்தல் தொழில், உலகத்தில் உயிர்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் நடுநிலையான சாட்சியாக நின்று அவரவர்களின் செயல்களுக்கேற்ப கர்மங்களை அழித்தருளுகின்ற சிவனின் அழித்தல் தொழில் ஆகிய மூன்று தொழில்களாகவும் அந்த தொழில்களால் வகுக்கப்படுகின்ற வேதத்தின் எல்லையாகவும் இருக்கின்றாள். குறிப்பு: வேதம் என்பது உலகத்திலுள்ள அனைத்து செயல்களுக்கும் காரணமாகவும் காரியமாகவும் இருக்கின்றது. அவற்றின் எல்லையாக (முடிவில் சென்று சேருகின்ற இடம்) திரிபுரை சக்தி இருப்பதை இந்த பாடலில் அறியலாம்.

திருமந்திரம் - பாடல் #1087

  திருமந்திரம் - பாடல் #1087: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும் பேணுஞ் சிவனும் பிரமனும் மாயனுங் காணுந் தலைவிநற் காரணி காணே. விளக்கம்: பாடல் #1086 இல் உள்ளபடி யோகியர்கள் தரிசித்த திரிபுரை சக்தியானவள் உலகத்தில் காணப்படுகின்ற அனைத்து விதமான தெய்வங்களின் உருவமாகவே இருக்கின்றாள். ஒரே விதமான தங்கத்திலிருந்து பலவிதமான நகைகள் செய்யப்படுவது போல ஒரே சக்தியானவள் அனைத்து தெய்வங்களாக இருக்கின்றாள். சாதகர்கள் போற்றுகின்ற மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் செய்கின்ற அழித்தல், படைத்தல், காத்தல் ஆகிய தொழில்களுக்கு நன்மை செய்யும் காரணியாக திரிபுரை சக்தியே இருப்பதைக் கண்டுகொள்ளுங்கள். கருத்து: உலகத்து உயிர்கள் வணங்குகின்ற பலவிதமான தெய்வங்கள் அனைத்துமே ஒரே சக்தியான திரிபுரையின் அம்சங்களாகவே இருக்கின்றன என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

திருமந்திரம் - பாடல் #1086

  திருமந்திரம் - பாடல் #1086: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) பூசனை கெந்தம் புனைமலர் மாகோடி யோசனை பஞ்சத் தொலிவந் துரைசெய்யும் வாச மிலாத மணிமந் திரயோகந் தேசந் திகழுந் திரிபுரை காணே. விளக்கம்: பாடல் #1085 இல் உள்ளபடி யோகியர்களின் உள்ளத்திற்குள் வந்து வீற்றிருக்கும் பராசக்தியை மானசீகமாக பூஜிக்கும் முறையை இந்தப் பாடலில் அறியலாம். சந்தனம் குங்குமம் பன்னீர் முதலிய நறுமணப் பொருள்களால் அபிஷேகம் செய்தும், வாசனை மிக்க மலர்களை மாலையாக செய்து அணிவித்தும், தங்களின் மூச்சுக்காற்றையே நாதஸ்வரமாகவும் இதயத் துடிப்பை மிருதங்க வாத்தியமாகவும் பல நாடிகளின் துடிப்புகள் உபவாத்தியங்களாகவும் கொண்டு இசைத்தும், மணியடித்தால் எதிரொலிக்கும் ஒலி போல வாயால் உச்சரிக்காமல் மனதிற்குள்ளேயே உள்ளுக்குள் எதிரொலிக்கும்படி மந்திரங்களை செபித்தும் யோகம் செய்து உலகங்கள் அனைத்திலும் நிறைந்து இருக்கும் திரிபுரையை தரிசிக்கலாம். கருத்து: மானசீக பூஜையின் மகத்துவத்தை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

திருமந்திரம் - பாடல் #1085

  திருமந்திரம் - பாடல் #1085: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம் எண்டிசை யோகி இறைவி பராசக்தி அண்டமோ டெண்டிசை தாங்கு மருட்செல்வி புண்டரி கத்தினுள்ளும் பூசனை யாளே. விளக்கம்: பாடல் #1084 இல் உள்ளபடி சாதகர்கள் தரிசித்த வயிரவி தனது நான்கு கைகளிலும் சிலம்பு வளையல் சங்கு சக்கரம் ஆகியவற்றை ஏந்திக்கொண்டு இருக்கின்றாள். அவள் இருக்கும் எட்டுத் திசைகளிலும் யோகம் செய்த யோகியர்களுக்கு இறைவியான பராசக்தியின் உருவமாக அண்டசராசரங்களையும் அதிலிருக்கும் எட்டுத் திசைகளையும் தாங்கிக் கொண்டு இருக்கும் அருள் வடிவாக அவர்களின் நெஞ்சத்தாமரைக்குள் வீற்றிருந்து அவர்களின் பூஜையை ஏற்றுக் கொள்பவளாக இருக்கின்றாள். கருத்து: வயிரவி மந்திரத்தை சாதகம் செய்து 64 கலைகளுக்கான தேவியர்களை சாதகர்கள் தரிசித்தனர். அதன் பிறகு எட்டு திசைகளிலும் இருக்கும் 64 தேவியர்களுக்கும் இறைவியான பராசக்தியை யோகம் செய்தால் அவள் அருள் வடிவாக யோகியர்களின் உள்ளத்திற்குள் வந்து வீற்றிருப்பாள். இவளே யோகியர்கள் செய்கின்ற பூஜையை ஏற்றுக்கொள்பவளாக இருக்கின்றாள். யோகியர...

திருமந்திரம் - பாடல் #1084

  திருமந்திரம் - பாடல் #1084: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) பூரித்த பூவித ழெட்டினுக் குள்ளேயோர் ஆரியத் தாளுண்டங்  கோரெண்மர் கன்னியர் பாரித்த பெண்க ளறுபத்து நால்வருஞ் சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே. விளக்கம்: பாடல் #1083 இல் உள்ளபடி பேரானந்தத்தில் பூரித்து இருக்கின்ற வயிரவியின் பூப்போன்ற இதழ்களிலிருந்து (வாயிலிருந்து) எட்டுவிதமான கன்னியர்கள் தோன்றி எட்டு திசைகளுக்கும் ஒவ்வொருவராக இருக்கின்றார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் எட்டுவிதமான கலைகள் தோன்றி அந்தந்த கலைகளுக்கான தேவியர்களாக மொத்தம் 64 கலைகளுக்கு 64 தேவியர்களாக இருக்கின்றார்கள். வயிரவி மந்திரத்தை சாதகம் செய்கின்ற சாதகர்கள் வயிரவியின் அம்சமான 64 தேவியர்களின் தரிசனத்தை கண்பார்கள்.

திருமந்திரம் - பாடல் #1083

  திருமந்திரம் - பாடல் #1083: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) பன்மணி சந்திர கோடி திருமுடி சொன்மணி குண்டலக் காதி யுழைக்கண்ணி நன்மணி சூரிய சோம நயனத்தாள் பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே. விளக்கம்: பாடல் #1082 இல் உள்ளபடி பலவிதமான நவரத்தினங்களை சூடிக்கொண்டு இருக்கின்ற வயிரவியின் திருமுடியானது கோடி சந்திரனைப் போல பிரகாசிக்கின்றது. அவளின் காதுகளில் மணியோசையை எழுப்பும் அழகிய குண்டலங்களை அணிந்திருக்கின்றாள். அவளின் கண்கள் அழகிய மானின் கண்களைப் போல இருக்கின்றது. சிறந்த மணிகளைப் போல பிரகாசிக்கும் சூரியனையும் சந்திரனையும் அவளின் இரு கண்களாக வைத்திருக்கின்றாள். அவளின் திருமுகம் அக்னியில் உருக்கும் தங்கம் போல் ஜொலித்துக் கொண்டு பேரானந்தத்தில் இருக்கின்றாள். கருத்து: கோடி சந்திரனைப் போல பிரகாசிக்கும் திருமுடி என்பது அனைத்து உயிர்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுப்பதைக் குறிக்கின்றது. மணியோசை எழுப்பும் குண்டலங்கள் என்பது உயிர்களுக்குள் இருக்கும் ஓங்கார நாதத்தை எழுப்புவதைக் குறிக்கின்றது. மானைப் போன்ற கண்கள் என்பது எப்போது தன்னை வந்து சரணடைவார்க...

திருமந்திரம் - பாடல் #1082

  திருமந்திரம் - பாடல் #1082: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை கல்லிய லொப்பது காணுந் திருமேனி பல்லிய லாடையும் பன்மணி தானே. விளக்கம்: பாடல் #1081 இல் உள்ளபடி அனைத்திற்கும் மேலானவளாக மெல்லிய உருவம் கொண்டு நிற்கின்ற வயிரவி மென்மையான கொடி போன்ற இடையைக் கொண்டும், விஷம் போன்ற கடினத் தன்மையின் உருவமாகவும், கிளிமூக்கு போன்ற சிவந்த நிறமுள்ள இதழ்களைக் கொண்டும், அழகிய ஆபரணங்களை அணிந்து கொண்டும், நீலக்கல்லைப் போன்ற நீல நிறம் கொண்ட திருமேனியையும், பலவிதமான ஆடைகளை அணிந்து கொண்டும், பலவிதமான நவரத்தினங்களை சூடிக்கொண்டும் இருக்கின்றாள். கருத்து: வயிரவியின் திருமேனியை இப்பாடலில் உருவகிக்கலாம். மெல்லியல் என்பது மென்மையான தன்மையைக் குறிக்கும். வஞ்சி என்பது சாதகர்களை சோதித்து அவர்களை மேன்மைப் படுத்தும் தன்மையைக் குறிக்கும். விடமி கலைஞானி என்பது உயிர்களின் வினைகளுக்கேற்ப வஞ்சித்தலும் தண்டித்தலும் செய்யும் தன்மையைக் குறிக்கும். கிஞ்சுக நிறம் என்பது சாதகர்கள் மேல் அன்பைப் பொழியும் தன்மையைக...

திருமந்திரம் - பாடல் #1081

  திருமந்திரம் - பாடல் #1081: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) சூலங் கபாலங்கை யேந்திய சூலிக்கு நாலங் கரமுள நாகபா சாங்குசம் மாலங் கயனறி யாத வடிவுக்கு மேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே. விளக்கம்: பாடல் #1080 இல் உள்ளபடி சோதி வடிவாக வந்து ஆட்கொள்கின்ற வயிரவியானவள் சூலி என்கிற பெயருடன் நான்கு கரங்களில் முறையே சூலம், கபாலம், நாக பாசாணம், அங்குசம் ஆகியவைகளை ஏந்திக்கொண்ட உருவமாக அருளுகின்றாள். இவள் திருமாலும் பிரம்மனும் அறிய முடியாத அடிமுடி காணாத பெரும் உருவமாக அனைத்திற்கும் மேலானவளாக மெல்லிய உருவம் கொண்டு நிற்கின்றாள். கருத்து: வயிரவி என்பவள் சூலி என்கிற பெயருடன் இருப்பதை இப்பாடலில் உருவகிக்கலாம். அவளுடைய கைகளில் உள்ள சூலம் அடியவர்களை காப்பதையும், கபாலம் அடியவர்களின் பிறவிகளாகத் தொடரும் வினைகளை அறுப்பதையும், நாக பாசாணம் பிறவியோடு வரும் பந்தபாசங்களை அறுப்பதையும், அங்குசம் அடியவர்கள் மாயையில் சிக்கித் தவிக்கும் போது தடுப்பதையும் குறிக்கின்றது.

திருமந்திரம் - பாடல் #1080

  திருமந்திரம் - பாடல் #1080: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) ஓதிய நந்தி யுணரும் திருவருள் நீதியில் வேத நெறிவந் துரைசெயும் போத மிருபத் தெழுநாள் புணர்மதி சோதி வயிரவி சூலம்வந் தாளுமே. விளக்கம்: பாடல் #1079 இல் உள்ளபடி சாதகர்களின் உள்ளத்திற்குள் திரிபுரையோடு ஒன்றாகக் கலந்து வீற்றிருக்கும் இறைவனின் திருவருளால் தமக்குள்ளே அவரை குருவாக உணரலாம். அப்படி குருவாக உணர்ந்த இறைவனே தருமத்தின் படி தகுதியானவர்களுக்கு வேதங்களில் உள்ள முறையில் வயிரவி மந்திரத்தையும் அதை சாதகம் செய்யும் முறையையும் அருளுகின்றார். அவர் அருளிய முறையின் படி இருபத்தேழு நாட்கள் வயிரவி மந்திரத்தை சாதகம் செய்தால் அதன் சக்தி பெருகிக் கொண்டே இருந்து வயிரவியானவள் சூலம் தாங்கிய சோதி வடிவாக வந்து சாதகரை ஆட்கொள்வாள்.

திருமந்திரம் - பாடல் #1079

திருமந்திரம் - பாடல் #1079: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) தென்னன் றிருநந்தி சேவகன் தன்னொடும் பொன்னங் கிரியுள பூதலம் போற்றிடும் பன்னும் பரிபிடி யந்தம் பகவனோ டுன்னுந் திரிபுரை யோதிநின் றானுக்கே. விளக்கம்: திருக்கயிலாய மலையில் உலகங்கள் யாவும் போற்றி வணங்கும் மாபெரும் குருவாகவும் அனைத்திற்கும் காவலனாகவும் வீற்றிருக்கும் பேரழகுடைய சிவபெருமானுடன் திரிபுரை சக்தியாகிய அம்மையும் சேர்ந்து இருக்கின்றாள். அது போலவே வயிரவி மந்திரத்தை இடைவிடாது செபித்து வரும் சாதகர்களின் உள்ளத்தையே கயிலாய மலையாகக் கொண்டு இறைவன் வந்து வீற்றிருக்கும் போது அவனுடனே ஒன்றாகக் கலந்து திரிபுரையும் வந்து வீற்றிருப்பாள்.  

திருமந்திரம் - பாடல் #1078

திருமந்திரம் - பாடல் #1078: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) புண்ணிய நந்தி புனிதன் திருவாகும் எண்ணிய நாட்க ளிருபத்தேழ் சூழ்மதி பண்ணிய வன்னி பகலோன் மதியீறு திண்ணிய சிந்தைதன் றென்னனும் ஆமே. விளக்கம்: பாடல் #1077 இல் உள்ளபடி வயிரவியிடம் புண்ணித்தைப் பெற்று குருவாக இருப்பவர்கள் இறைவனின் தன்மையில் இருந்து வயிரவி மந்திரத்தையும் அதைச் சொல்லும் முறையையும் அருளுவார். குரு சொன்ன முறைப்படி வயிரவி மந்திரத்தை எண்ணத்தில் வைத்து இருபத்தேழு நாட்களும் சூரிய கலை சந்திர கலை ஆகியவற்றின் மூலம் உள்ளிழுத்த மூச்சுக்காற்றால்  மூலாதாரத்தில் இருக்கும் அக்னியை வளர்த்து அதை முழுவதுமாக ஆராய்ந்து அதன்படி தொடர்ந்து சிறிதும் மாறாத சிந்தனையுடன் மானசீகமாக செபித்து சாதகம் செய்து வருபவர்களின் சிந்தனையில் பேரழகுடைய சிவபெருமான் வந்து வீற்றிருப்பான். கருத்து: குரு கூறிய முறைப்படி வயிரவி மந்திரத்தை சாதகம் செய்யும் போது நொடிப் பொழுது நேரம் கூட இறைவனைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் செய்பவர்களின் சிந்தனையில் இறைவன் வந்து வீற்றிருப்பான்.

திருமந்திரம் - பாடல் #1077

திருமந்திரம் - பாடல் #1077: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) ஆகின்ற மூவரு மங்கே யடங்குவர் போகின்ற பூதம் பொருந்து புராதரர் சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப் போகுந் திரிபுரை புண்ணியத் தோருக்கே . விளக்கம்: பாடல் #1076 இல் உள்ளபடி ஆதியும் அந்தமுமாகி நிற்கின்ற வயிரவி மந்திரத்தில் பிரம்மன் விஷ்ணு உருத்திரன் ஆகிய மூன்று தேவர்களும் அடங்கி இருக்கின்றனர். முக்தி எனும் பெரும்பயன் பெறுவதற்கு மூன்று தேவர்களும் அடங்கி இருக்கும் வயிரவி மந்திரத்தை பஞ்சபூதங்களால் ஆன அழியக்கூடிய உலகத்தைச் சார்ந்து இருக்கின்ற வாழ்க்கை முறையை விரும்பாமல் சாதகம் செய்கின்ற சாதகர்களாகவும் அவர்கள் செய்கின்ற சாதகமாகவும் செய்யப்படுகின்ற நோக்கமாகவும் இருந்து புண்ணியத்தை வயிரவி அருளுகின்றாள்.  

திருமந்திரம் - பாடல் #1076

 திருமந்திரம் - பாடல் #1076: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) அந்தம் பதினா லதுவே வயிரவி முந்து நடுவும் முடிவும் முதலாகச் சிந்தைக் கமலத் தெழுகின்ற மாசத்தி அந்தமு மாதியு மாகிநின் றாளே. விளக்கம்: பாடல் #1075 இல் உள்ளபடி பதினான்கு கலைகளாகவும் இருக்கின்ற வயிரவியானவள் தான் செய்கின்ற செயல்களில் முதல் நடு கடைசி என்ற மூன்று நிலைகளிலும் பதினான்கு விதமான செயல்களையும் செய்து கொண்டு கடைசியான செயலையே முதலாகவும் ஆரம்பித்து எப்போதும் செய்து கொண்டே இருக்கின்றாள். இவளின் மந்திரத்தை செபிக்கும் சாதகர்களின் தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரிலிருந்து வெளிப்பட்டு எழும்பும் மாபெரும் சக்தியாகவும் அச்சக்தியில் ஆதியாகவும் அந்தமாகவும் நிற்கின்றாள்.

திருமந்திரம் - பாடல் #1075

  திருமந்திரம் - பாடல் #1075: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) பன்னிரண் டாங்கலை யாதி வயிரவி தன்னி லகாரமு மாயையுங் கற்பித்துப் பன்னிரண் டாதியோ டந்தம் பதினாலுஞ் சொன்னிலை சோடச மந்தமென் றோதிடே. விளக்கம்: பன்னிரண்டு கலைகளாக ஆதியிலிருந்தே இருக்கின்ற வயிரவியானவள் தனக்குள் அகாரக் கலையையும் (படைத்தல்) மாயைக் கலையையும் (மறைத்தல்) சேர்த்து பதினான்கு கலைகளாகவும் அதனோடு ஆதியும் அந்தமும் சேரும் போது பதினாறு கலைகளாக முடியும். இந்த பதினாறு கலைகளை சொல்கின்ற நிலையில் அவை பதினாறு எழுத்துக்கள் கொண்ட மந்திரமாக இருக்கின்றது. வயிரவியாக இருக்கும் இந்த மந்திரத்தை ஓதுங்கள். கருத்து: வயிரவியானவள் பன்னிரண்டு விதமான சூட்சுமமான செயல்களை செய்கின்றாள். அவள் இயக்கம் பெற்று உலக செயல்களுக்காக படைத்தல் மற்றும் மறைத்தலுக்கான காரியத்தை செய்யும் போது பதினான்கு செயல்களை செய்கின்றாள். இந்த செயல்களை எடுத்து ஒலிவடிவமாக சொல்லும் போதும் ஒளிவடிவமாக எழுதும் போதும் அவை பதினாறு எழுத்துக்கள் கொண்ட மந்திரமாக இருக்கின்றது. இந்த மந்திரத்தை ஓதுங்கள்.